Sunday, 23 March 2014


அன்பின் முழுவுரு நீ
~~~~~~~~~~~~~~~~~~

அன்பின் ஆழம் உணர்த்தி
ஆதி முதல் அந்தம் பகிர்ந்து 
இனிதாய் பல கதைகள் பேசி
ஈகையில் இமையம் தொட்டு
உறவுக்குப் பாசம் உணர்த்தி
ஊக்கம் கொண்டு உழைத்து 
எண்ணங்களில் தீமை நீக்கி
ஏழையர்க்கு நன்மை செய்து
ஐய்யன் பெருமாள் நாமாம் நிதமும் துதித்து
ஒளி வீசும் கண்களில் காதல் உணர்த்தி
ஓய்வின்றி உனையே சிந்திக்க வைக்கும் அன்பின் முழுவுரு நீ......



கல்வி
******

கற்காலம் கடந்தும் மிருகத்தனத்தில் மாற்றம் இல்லை 
நாகரிக மாற்றம் இங்கு மனிதம் போற்றவில்லை
குரங்கிலிருந்து பிறந்த குடி கூத்தாடுதல் சகிக்கவில்லை
உடைகள் மாறினும் உள்ள புத்தி மாறவில்லை
கடல் கடந்துக் காடுகள் அழித்துக் கற்றது ஒன்றுமில்லை
படிப்படியாய் பாடம் வகுத்து பள்ளி ஒன்று கட்டிவைத்து
காலம் எல்லாம் கற்றுத் தந்து கடைசியில் பலனோ ஒன்றுமில்லை

ஏட்டுப் படிப்பு ஏட்டோடு போக
பார்த்துக் கற்றது பலனற்றுப்போக
பள்ளி சொல்லும் பாடம் தான் என்ன
தாய்மொழி மறக்கச் செய்து
சுயநலம் யாதனப் புத்தி புகட்டி
மனிதம் கொன்று புசிக்கத் துடிக்கும்
வெறியை வளர்த்து வெற்றி கொண்டு
வீரநடை போடும் பகுத்தறிவற்ற கல்வி

மனிதம் போற்றும் மானுடக் கல்வி வேண்டும்
படிப்பில் பகுத்தறிவு வளர்தல் வேண்டும்
தாய்மொழி மகத்துவம் புரிதல் வேண்டும்
இல்லைகள் ஏதுமற்ற மனித மனம் போற்றும்
கல்வி வேண்டும்
பாரதம் கல்வியில் புதுப்புரட்சி காண வேண்டும்.

Wednesday, 29 January 2014

தோழமை எனப்படுவது யாதெனில் 
*******************************

உறவுகளில் உயர்ந்தது 
உள்ளப் புரிதலில் வளர்வது 
உலகில் சிறந்தது
சுயநலம் அற்றது
ஆதி முதல் அந்தம் யாவும் பகிர்வது
கள்ளமில்லா அன்பைச் சுமப்பது
முற்றும் விரசமற்று உரைப்பது
காதல் காமம் தொடாது கண்ணியம் காப்பது
கொண்ட அன்பு குறையாமல் இறுதிவரை பயணிப்பது
சோர்ந்து போகும் தருணம் உயிர் ஜீவன் அளிப்பது
ஒவ்வொரு கணத்திலும் இன்பம் சேர்ப்பது
குரோதம் கோபம் கடந்தது
அறிவற்று நாவிடறிய கணங்களை மறப்பது
நட்பெனும் ஒற்றைச் சொல்லில் அழியாப்பந்தம் போற்றுவது
முடிவின்றி வார்த்தைகள் அற்று தொடர்வது

தோழமை எனப்படுவது யாதெனில் .........................................
என்றேன்றும் ஆச்சர்யங்கள் நிறைந்தது


Monday, 5 November 2012

உறவறியா உணர்வு



என் காலக் கடிகாரத்தின் முட்கள் கிழித்த 
மெல்லிய திரை விலக்கி 
எங்கிருந்தோ புது உறவாய் வந்தாய் 

என்னில் நான் உணராத எனை எனக்குணர்த்தி 
இதயத்தின் இறுதிவரை இறங்கிவிட்டாய் 

நட்பு சொல்லிய கணங்களில் நண்பனாய் நிமிர்ந்தாய்
அன்பு அணைத்த கணங்களில் அன்பனாய் சிறந்தாய்
முட்களாய் முரண்பட்ட வெகு சில நொடிகளும்
மறக்க மலராய் மலர்ந்து நின்றாய்

நான் எனை மறக்கும் நாட்கள் வரினும்
அன்பே உருவாய் என்னை அரண் என
காக்கும் உன்னை என்றும் மறவேன்

கண்கள் என்றும் காணாத
உள்ளம் மட்டுமே உணரும் உயிராகிய
உணர்வின் நிழலாய் தொடரும் உறவு நீ !

Thursday, 25 October 2012

நிலைத்திருக்கும் நினைவுகள் 
**************************
பிறந்து வளர்ந்த இடம் மனதில் பயிரிட்டதோ 
ஆயிரம் ஆயிரம் நினைவுகள் 
அவையாவும் நான் ஆடிய களத்தையும் 
வாடிய கணத்தையும் தன்னுள் உயிராய் 
சேமித்து இன்றும் செழித்து
வளர்ந்து கொண்டே இருக்கிறது

தாய் மாமனின் உயிரம் கண்டு அஞ்சி
அன்னையின் சேலைத் தலைப்பில் ஒளிந்த கணம்
வீட்டு கடைக்குட்டியாய் அல்லி ராஜ்ஜியம்
நடத்திய என் வீட்டு முற்றம்

அக்கா அண்ணன் என எல்லோரும் ஏங்கி நிற்க
என்னை மட்டும் வாரச் சந்தைக்கு
அழைத்துச் செல்லும் பாட்டி
எப்பொழுது உண்டாலும் ஆசையாய் எனக்கு
உணவை ஊட்டாமல் தான் உண்ணாத சிற்றப்பா

பள்ளி விடுமுறையில் அண்ணனே மன்னனாய்
தட்டாமல் பின்பற்றும் சேனை என நாங்கள்
அண்ணன் தலைமையில் மீன் பிடித்த குட்டையும்
களிமண் எடுத்த மாமன் வீட்டுக் காடும்
இன்று காணும் போது வெறும் ஏக்கம் மட்டுமே

காடை விரட்டிய சோளக்காடும்
பாம்பை கண்டு பதறிய ஏரியும்
நீச்சல் கற்றுக் கொடுத்த பக்கத்து வீட்டு அண்ணனும்
மிதிவண்டி ஓட்டிப் பழக்கிய ஆசை அக்காள்களும்
முதல் முதலில் ஓட்டிய அப்பாவின் வண்டியும்
ஐந்தாவது படிக்கும் பொழுது வீட்டுக்குக்
கொணர்ந்த தொலைக்காட்சிப் பெட்டியும்

பள்ளிக் காலத்தில் எழுதிய முதல் கவிதை
போட்டிகள் பெற்றுத் தந்த பரிசு
இன்றும் பசுமையாய் தொடரும் நட்பு

இன்னும் இன்னும் இன்னும்.................
எத்தனையோ ஆயிரம் நினைவுகள்
மூச்சு முட்டும் இத்தனை நினைவுகளும்
நிலைத்திருக்கும் எக்காலத்திற்கும் 


நட்புச் சரித்திரம்
----------------------

தவறு செய்பவன் மனிதன் 
பரிகாரம் தேடிப் பகிர்பவன் நண்பன் 

ஆதரவு காட்டி அணைக்கும் நட்பு
அகிம்சையால் மனம் தேற்றி
மெளனமாய் வலி நீக்கி
வலிய கரம் கொண்டு மீட்டெடுக்கும்

மறக்கப்பட்டு மீண்டது நண்பனாய்
இல்லாமல் தவறு தொடரின் 
விட்டு விலகியும் நின்று விடும்


அன்னையாகிய என்னுள்
**********************

உன்னை என்னுள் உணர்ந்த 
அந்த நாள் முதல் 
என் மனக்கோட்டையின் அரசாட்சி 
முழுவதிலும் நீ

ஏதேதோ கற்பனைகள்
இரவு பகலாய் உன் நினைவு
கையில் உறவாடிய புத்தகத்தில்
கருத்து நிலைக்கவில்லை
கண்கள் தேடியதோ உனக்கான
பெயர் அடையாளத்தை

ஆயிரம் உறவுகள் எனக்கு இருந்தும்
ஆயிரத்து ஒன்றாக
என்னுள் வந்த நீ மட்டுமே எல்லாமாய்

தனிமையை நான் உணராத
அந்தப் பத்து மாதங்கள்
அழகிய அவ்வின்ப நாட்கள் யாவும்
உனக்கே சமர்ப்பணம் உறவே

இதோ உன்னை காணும் ஏக்கத்துடன்
வலி தாங்கி மனம் ஏங்கிய கணம்
உன் குரல் கேட்ட இன்ப சிலிர்ப்புடன்
சிறு மயக்கம்

ஒளி தேடிய கண்ணும்
உன் வாசம் தேடிய நாசியும்
உன் ஸ்பரிசம் தேடிய மனதும்
விழித்து எழுந்ததோ உயிர் வரை
சென்று தாக்கிய வேறு ஒலி கேட்டு

பெரும் சிலிர்ப்புடன் பெற்றவளின்
குரல் கேட்டு திறந்த என் கண்கள்
முழுவதிலும் தெங்கி நின்ற ஏக்கம் யாவும்
என் அன்னையே உனக்காக

அன்னை இன்பம் உணர்ந்த பின்
என் இதயம் முழுவதும்
அம்மா உன் உயிரோவியம்

உள்ளம் நிறைத்த இரு உறவின்
உயிர் ஸ்பரிசம் கண்ட அந்த நொடி
இன்றுவரை இன்பம் தரும் 
நினைவின் கல்வெட்டு